பரவுதல் : Diffusion இயக்க சுதந்திரமுள்ள பொருட்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதை பரவுதல் என்கிறோம் . வாயு நிலையிலும் திரவ நிலையிலும் பொருட்களி...
பரவுதல்: Diffusion
இயக்க சுதந்திரமுள்ள பொருட்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதை பரவுதல் என்கிறோம்.
வாயு நிலையிலும் திரவ நிலையிலும் பொருட்களில் பரவுதல் காணப்படுகிறது. சுற்றுப்புறங்களில் பூக்கள் மற்றும் பழங்களின் மணம் பரவுவதற்கு இந்நிகழ்வு காரணமாகும். வெப்பநிலை கூடும்போது பரவும் திறனும் கூடும்.துகள்களில் இயக்கம் திரவ நிலையை விட வாயு நிலையில் கூடுதல்,காரணம் வாயுநிலையில் மூலக்கூறுகள் மிகச் சுதந்திரமாக பரவுகிறது.ஆனால் திட நிலையில்துகள்கள் இயங்குவதில்லை, அதனால் அங்கு பரவுதல் நடைபெறுவதில்லை.
சுத்தமான பொருட்களும் கலவைகளும் (Pure Substances and Mixtures)
ஒரே பண்புகளையுடைய துகள்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் சுத்தமான பொருட்கள்.
உதாரணம் : தண்ணீர் , சர்க்கரை, உப்பு. நாம் இப்பொருட்களில் சிறிதளவு எடுத்துப் பார்த்தால் இவற்றின் துகள்களின் பண்புகள் ஒன்றுபோல் காணப்படும்.
வேறுபட்ட பண்புகளையுடைய துகள்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை கலவைகள் என்று கூறலாம். உதாரணம் : உப்புக்கரைசல். இது தண்ணீர் மற்றும் உப்பின் துகள்களைக் கொண்டது. குளிர்பானங்கள் , சோடா நீர் , ஆபரணத்தங்கம் , தேனீர் , காற்று , மண் போன்றவை கலவைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
கலவைகளின் பகுதிப் பொருட்களை பிரித்தறிதல்.
அன்றாட வாழ்க்கையில் கலவைகளைப் பிரித்தெடுக்கும் சூழ்நிலைகள் உண்டல்லவா.
உதாரணம் : நெல்லில் இருந்து பதர் பிரித்தெடுத்தல், தேனீரை வடிகட்டுதல்
பகுதிப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து கலவைகளில் இருந்து பகுதிப்பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறைகளைத் தேர்வு செய்யலாம்.
1. நாம் தேனீரிலிருந்து தூளைப் பிரித்தெடுக்கலாம். இங்கு கலவையிலுள்ள துகள்களின் அளவில் உள்ள வேறுபாட்டின் காரணமாக பிரித்தெடுக்கப்படுகிறது.
2. அலுமினியத்தூளும் இரும்புத்தூளும் சேர்ந்த கலவையிலிருந்து இரும்பை பிரித்தெடுக்க காந்தத்தைப் பயன்படுத்தலாம். காரணம் இரும்புகாந்தத்தன்மை உடைய பொருள். அலுமினியம் காந்தத்தன்மையற்ற பொருள்.
கந்தகமும் இரும்பும் சேர்ந்த கலவை
3. உப்பு , உப்புக்கரைசலிருந்து காய்ச்சி வடித்தல் மூலமாகப் பிரித்தெடுக்கப் படுகிறது. இங்கு தண்ணீரின் ஆவியாகும் தன்மை பயன்படுத்தப்படுகிறது.
4. நெல் பதர் நெல்லை விட லேசானது. இது தூற்றுதல் மூலமாகப் பிரித்தெடுக்கப் படுகிறது.
காய்ச்சி வடித்தல் (Distillation)
கலவையில் ஒரு பகுதிப்பொருள் ஆவியாகும் தன்மையுடையதும் மற்றொரு பகுதிப்பொருள் ஆவியாகும் தன்மை இல்லாததுமானால் காய்ச்சி வடித்தல் (Distillation) முறையில் கலவைகளைப் பிரித்தெடுக்கலாம்.
உப்புக்கரைசலிருந்து உப்பையும்தண்ணீரையும் பிரித்தெடுக்க இம்முறை பயன்படுத்தலாம்.ஒன்றோடு ஒன்று கலக்கின்ற கலவையில் உள்ள பகுதிப்பொருட்களின் கொதிநிலையில் அதிக வேறுபாடு காணப்பட்டாலும் இம்முறையைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம் . உதாரணம் : அசட்டோன் (கொதிநிலை 560C), தண்ணீர் (கொதிநிலை 1000C) சேர்ந்த கலவையை பிரித்தெடுக்க காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தலாம். மருத்துவ உபயோகத்திற்கும் , சேமிப்பு மின்கலத்தில் பயன்படுத்துவதற்குமான சுத்தநீர் (Distilled Water) இம்முறையில் தயாரிக்கப்படுகிறது.
வடித்துப்பகுத்தல் (Fractional Distillation)
கலவையில் அடங்கியிருக்கும்பகுதிப்பொருட்களின் கொதிநிலையில் வேறுபாடு மிகக் குறைவாகக் காணப்படுமானால் அக்கலவையைப் பிரித்தெடுக்க வடித்துப்பகுத்தல் முறையைப் பயன்படுத்தலாம். உதாரணம் : எத்தனால் (கொதிநிலை 780C) , மெத்தனால் (கொதிநிலை 650C)
இவை ஒன்றோடு ஒன்று கலக்கின்ற திரவங்களாகும்.கொதிநிலையில் வேறுபாடு மிகக் குறைவாகும். இம்முறையைப் பயன்படுத்தி இவற்றைப் பிரித்தெடுக்கலாம் .
பிரித்தெடுக்கும் புனல் (Separating Funnel) பயன்படுத்தி கலவைகளைப் பிரித்தெடுத்தல்:
ஒன்றோடு ஒன்று கலவாத திரவங்களை பிரித்தெடுக்க பயன்படுத்தும்
கருவியின் பெயர்தான் பிரித்தெடுக்கும் புனல்.
பதங்கமாதல் (Sublimation)
சேர்மங்களான அமோனியம் குளோரைடு அயோடின் போன்றவை பதங்கமாதல் மூலம் பகுதிப்பொருட்களாகப் பிரித்தெடுக்கப்படுகிறது.
மையம்விலக்குதல் (Centrifugation)
பகுதிப்பொருட்களின் எடையில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் கலவைகளைப் பிரித்தெடுக்க மையவிலக்குக் கருவியைப் பயன்படுத்தலாம். சோதனைக் குழாயில் கரைசலை எடுத்து இந்தக் கருவியில் வைத்து ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு வேகமாகச் சுழற்றவும். எடை அதிகமான துகள் மையத்தில் இருந்து விலகியும் எடை குறைவான பொருள் மையத்திற்கு அருகிலுமாக வேறுபடுத்தப்படுகின்றன.மருத்துவ ஆய்வுக் கூடங்களில் இரத்த அணுக்களை பிரித்தெடுக்கவும் ஆய்வகத்தில் வீழ்படிவுகளை பிரித்தெடுக்கவும் ,இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
நிறவரைவியல் (Chromatography)
நிறவரைவியலைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட கரைபொருள் ஒரு கரைப்பானில் காணப்படும் என்றால் அதைப்பிரித்தெடுக்கலாம். இம்முறையை முதன்முதலில் பயன்படுத்தியது நிறமுள்ள பொருட்களை பிரித்தெடுப்பதற்காகும். எனவே இச்செயல்முறை நிறவரைவியல் என்று அழைக்கப்படுகிறது.