அந்திமழை - புலனின்பம் XAT KARPAKAVALLY , G.H.S.S MARAYOOR சங்க இலக்கியங்களில் முதன்மையானது எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூற்...
அந்திமழை - புலனின்பம் XAT
KARPAKAVALLY , G.H.S.S MARAYOOR
- சங்க இலக்கியங்களில் முதன்மையானது எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூற்கள்.
- பத்துப்பாட்டு நூலில் ஐந்து பாடல்கள் இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது.
- பத்துப்பாட்டு நூல்கள் ஆவன திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் என்பன.
மெய்
- நெடுநல்வாடை -ஆசிரியர் -நக்கீரர் அகப்பாட்டாகவும் -புறப்பாட்டாகவும் கருதப்படுகிறது.
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது.
- நெடுநல்வாடை பாடல் வரி 1- 8 வரையிலான பாடல் ஐம்புலன்களில் 'மெய்' உணர்வைத் தூண்டுவதாக அமைந்தி ருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
- பாடலின் பொருள் - உலகம் குளிரும்படி வலப்பக்கமாக சூழ்ந்து, மழையைத் தருகின்ற பொய்யாத வானம் தவறாது, புது மழை பொழிந்தது -அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம் பெருக்கெடுத்து வர, அம்மழை வெள்ளத்தை வெறுத்து , வளைந்த கோலினை கைகளில் வைத்திருக்கும் ஆடு மாடு மேய்க்கும் கோவலர் (இடையர்) தங்களது ஆநிரைகளை (ஆடு மாடுகளை) மேய்ச்சல் நிலங்களிலிருந்து வேறு இடங்களுக்கு பற்றிக்கொண்டு செல்கின்றனர்- தங்களது மேய்ச்சல் நிலத்திலிருந்து வேறு இடம் நோக்கிச் செல்ல நேர்ந்த ஆநிரைகளும் காவலரும் கலங்கி நிற்கின்றனர் - கோவலர்களது கழுத்தில் நீண்ட இதழ்களினாலாகிய காந்தள் மலர் மாலை மழை வெள்ளத்தால் நனைந்திருந்தது , அதன் வெள்ளம் மேனியில் பட , அவர்களது உடல் மேலும் குளிரால் நடுங்கியது- குளிரினது வாட்டத்தைப் போக்க கொள்ளிக் கட்டைகளைக் கையில் ஏந்தி நின்றிருந்த போதும், அவர்களது புடைத்த கன்னங்கள் குளிரால் நடுங்கியது- என்கிறது இப்பாடல்.
- இடையர்களது உடல் குளிரால் நடுங்கியது - மெய்யை வருத்தியது -இங்கு மெய்யுணர்வை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது.
பெரும்பாணாற்றுப்படை
- பெரிய யாழை(பேரியாழ்) வாசித்து பரிசில் பெறச் செல்லும், பாணர்களை ஆற்றுப்படுத்துவதாக (வழிப்படுத்துவதாக) அமைவது பெரும்பாணாற்றுப்படை.
- தொண்டை நாட்டுத் தலைவனை- கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
வாய்
- பாடலடிகள் 257 முதல் 262 வரையிலாக அமைந்துள்ள பாடப்பகுதி, பாணர்கள் பரிசில் பெறச் செல்லும் ஊரினது செழிப்பினைக் கூறுவதாக அமைகிறது. தொண்டை நாட்டு மருதநில வளம் பாடல் பொருளாக அமைகிறது.
- மருதநிலம் - கரும்பு மிகுதியாக விளைவிக்கப்படுகிறது - கரும்பு ஆலைகள் அங்கு மிகுதியாக உள்ளது. அங்கே....
- மழை மிகுதியாகப் பொழிகின்ற காரணத்தால் - மூங்கில்கள் மிகுதியாக வளர்ந்திருக்கக்கூடிய மலையிலே - அச்சத்தைத் தருகின்ற சிங்கம் போன்ற யாளி என்ற விலங்கு - யானைக் கூட்டத்தைத் தாக்குவது போலவும் - யானைகள் ஒன்று சேர்ந்து அத்தாக்குதலுக்கு அஞ்சி, பிளிறுவதைப் போலவும் (கதழ்வுற்றா அங்கு)- கரும்பைப் பிழிகின்ற எந்திரத்தினுடைய ஓயாத ஓசை ஒலித்துக் கொண்டே இருக்க -ஆலைகளில் பிழியப்பட்ட கரும்புச் சாறு காய்ச்சப்பட்டு கொண்டிருக்கிறது- கரும்புச்சாறு காய்ச்சப் பயன்படும் அடுப்பிலிருந்து புகை அவ்விடம் முழுக்க சூழ்ந்திருந்தது. அங்கு சென்று கரும்பினது இனிய சாறு வேண்டுவோர் வேண்டுமட்டும் பருகலாம்- என்கிறது இப்பாடல்.
- கரும்புச் சாறு பிழியப்படும் காட்சி- அவை காய்ச்சப்படும் அழகு - காய்ச்சிய தேன்பாகின் வாசனையோடு கூடிய சுவை- பாடலை வாசிக்கையில் வாயில் நீர் வடியச் செய்யும் விதமாக அமைவதால் ...
- வாய்க்கு இன்பம் சேர்க்கும் பாடலாக இப்பாடல் குறிப்பிடப்படுகிறது.
சிறுபாணாற்றுப்படை
- சீரியாழை (சிறிய யாழ் என்னும் இசைக்கருவி) வாசித்துக்கொண்டு பரிசில் பெறச் செல்லும் பாணர் முதலானவர்களை ஆற்றுப்படுத்துவதாக அமைவது சிறுபாணாற்றுப்படை.
- ஓய்ம நாட்டுக் குறுநில மன்னனான நல்லியக்கோடனை- இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
- பாடலடிகள் 164 முதல் 174 வரையிலாக அமைந்துள்ள பாடப்பகுதி ,பரிசில் பெற சிறு பாணர்கள் ,செல்லும் வேலூர் என்னும் முல்லை நிலத்து ஊரினது வனப்பைக் கூறும் முகமாக அமைந்துள்ளது.
கண்
- கண்ணுக்கு இனிமை சேர்க்கும் வகையிலமைந்த முல்லைநிலக் கொல்லையின் அழகு வர்ணிக்கப்படுகிறது.
- முல்லை நிலத்தைச் சார்ந்த ஊர் வேலூர்- அவ்வூரை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பதை எதிர்கொள்ளும் பாணர் இவ்வாறு விளக்குகிறான்- அவ்வூரின் வழி நெடுகிலும் படர்ந்திருக்கக் கூடிய அவரையின் பூக்கள் பவளத்தைக் கோர்த்தாற்போல் பூத்திருக்கும்- கருநிறக் காயாம் பூக்களின் அரும்புகள் மயிலினது கழுத்தைப் போன்று மலர்ந்திருக்கும்- செழுமையாகப் படர்ந்திருக்கக்கூடிய முசுண்டைக் கொடியினது பூக்கள் பனை ஓலையால் செய்யப்பட்டுள்ள பெட்டிகளைப் போன்று (அதை கொட்டம் என்பர்) பூத்திருக்கும்- காந்தள் மலர்கள் பெண்களது சிவந்த கை விரல்களைப் போலப் பூத்திருக்கும்-அவ்வாறான பசுமை மிகுந்த முல்லை நிலக் கொல்லை (காடு)களில் சிவந்த நிறத்தையும் புள்ளிகளை உடையதுமான 'இந்திரகோபப்' பூச்சிகள் ஊர்ந்து செல்லும்- முல்லைக் கொடி படர்ந்து பூத்திருக்கும் காட்டின் நடுவே , அருவி பாயும் மலையின் பின்புறம் ஞாயிறு (சூரியன்) மறையும், அவ்வேளை வேலினது நுனியைப்போன்று அங்குள்ள கேணிகளில் நீர்ப்பூக்கள் பூத்து நிற்கும்- இத்துணை அழகுடைய வேலூரைச் சென்றடைந்தால் வெயில் வருத்த நடந்து வந்த களைப்பை ஆற்றிக் கொள்ள புல்லால் வேயப்பட்ட குடில்களில் இளைப்பாறலாம் -என்று முடிகிறது இப்பாடல்.
- வழி நெடுகிலும் கூறப்பட்ட முல்லைநிலக் காட்டினது வனப்பு, வர்ணனை, எடுத்தாளப்பட்ட உவமை கண்களை மூடிக்கொண்டு கேட்டாலும் கண்முன் விரியும் காட்சியாக அமைந்து கண்களுக்கு இனிமை சேர்த்தது.
பட்டினப்பாலை
- இது ஒரு அகப்பாடல் . பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- சோழ வளநாட்டின் தலைநகராம் பூம்புகார். பூம்புகாருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு.
- காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பினைக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
- மூக்கிற்கு இன்பம் தருவதாய் அமைகின்ற 8ஆம் அடிமுதல் 20ஆம் அடி வரையிலான பாடல்பகுதி சோழவளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்து மருத நில வளத்தைக் கூறுகிறது.
மூக்கு
- காவிரி ஆறு பாய்வதால் சோழ வளநாட்டு அகன்ற வயல்களில் விளைச்சலானது இடைவிடாது நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அறுவடை செய்யப்பட்டு, ஆலைகளில் பிழியப்படும் கரும்பின் சாறானது இடையறாது காய்ச்சப்படுவதால் , அதன் சூடான புகைப்பட்டு வயல் வெளிகளின் அருகாமையிலுள்ள நீர்நிலைகளிலுள்ள நெய்தற்பூக்கள் வாடி நிற்கின்றது- அங்கு காய்ந்த செந்நெல்லின் மணத்தால் கவரப்பட்ட எருமைகள் அவற்றை வயிறு நிரம்ப உண்டு, தனது கன்றுகளோடு நெற்குதிர்களின் (நெல் சேகரிக்கும்பெரிய கலன்) நிழலில் உறங்குகின்றது- அங்கு எங்கெங்கு நோக்கினும் குலைகளை உடைய தெங்கு, வாழை ,கமுகு போன்றவை குலைத்து நிற்கின்றது- மஞ்சள் செடிகளின் வாசனை கமழ, பல இன மாமரங்கள் பூத்து காய்த்து நிற்க, பனையும் , கிழங்கினை உடைய இஞ்சியும் காற்றிலே மணம் பரப்பி நிற்கிறதாம் காவிரிப்பூம் பட்டினம் எனப் பாடுகிறார் புலவர்.
- வயல்வெளி செழித்து வளப்பமுடையதாக, பயிர்களிலிருந்து வீசும் இளம் வாசனையானது மூக்கிற்கு இன்பம் பயப்பதாய் உள்ளது.
மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் இது.
- இந்நூலின் ஆசிரியர் மாங்குடி மருதனார்.
- பாண்டிய நெடுஞ்செழியனுக்கு' உலகியல் உண்மைகளை' உணர்த்துவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
- பாடலடிகள் 89 முதல் 97 -அடிவரையிலாக உள்ள நமது பாடப்பகுதியில் பாண்டி நாட்டு மருதநில உழவர்களினது உழவு சார்ந்த செயல்களையும், உழவர் தங்களது தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த காட்சியும் விவரிக்கப்படுகிறது.
செவி
- செவிக்கு இன்பம் தருவதாய் அமையும் அப்பாடற் காட்சியிலே.....
- யானைகட்டிப் போரடிக்கும் பாண்டிநாட்டு மருத நிலத்திலே உழவர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு தத்தம் நிலங்களில் உழவு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஒருபுறம்- நீரைச் சாலால் முகர்ந்து இரைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இசைபாடும் ஓசை, ஏற்றம் இரைக்கும் பன்றிப்பத்தர் என்னும் கருவி யினது ஓசை, அகன்ற பூட்டைப் பொறி என்னும் கருவினது ஓசை, அங்கு நெல் அரிகளின் மீது கடா விடுகின்றவர் எழுப்பும் ஓசை, அங்கு மேய்கின்ற எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியினது தெளிந்த ஓசை, அங்கு பயிர்களைத் தின்ன வரும் கிளி முதலிய பறவைகளை ஓட்டும் ஓசை, பூத்திருக்கும் தாமரை மலர்கள் சூழ்ந்த பொய்கையின் மணல் திட்டுகளில் பரதவ மகளிர் ஆடும் குரவைக் கூத்தின் ஓசை என- ஓசையால் மலிந்து மகிழ்ச்சியோடு நிறைந்த நிலமாக மருதநிலம் காட்சி அளிக்கிறதாம்.
- ஓசையின் மலிவால் இப்பாடலடிகளும் செவிக்கு இன்ப உணர்வினை உருத்துவதாக அமைகிறது.
தேவாரம்
- தேன்+ஆரம்- எனப் பிரியும் . தேன் நிறைந்த பூக்களால் அமைந்த மாலை எனப் பொருள்படும்.
- அதுபோல் கடவுளை தேமதுரப் பாக்களால் பாடிய நூல் தேவாரம் எனப்பட்டது.
- தேவாரம் - திருநாவுக்கரசரால் இயற்றப்பட்டது .
- சைவக்குரவர் நால்வரில் ஒருவர்.
- திருநாவுக்கரசர் தனது தந்தையம் பிரானாகிய எம்பெருமானின் (ஈசனின்) திருவடியை ஏத்திப் பாடுவதாக அமைந்த பாடலிது.
- குற்றமற்ற வீணை இசை போலவும், மாலை நேரக் குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி போலவும், வீசுகின்ற தென்றல் காற்றினைப் போலவும், மாலைநேர இளவெயில் போலவும், வண்டுகள் மொய்க்கும் மலர்ப்பொய்கை போன்றதுமாக என் தந்தையான ஈசனது இரு திருவடி, நிழல் தருவதாக உள்ளது என்கிறது இப்பாடல்.